மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்

0
1643

ஜெய்சங்கரை வைத்து படம் எடுத்து ஒரு தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்தார், நடுவீதிக்கு வந்தார் என்று எவராலும் விரல் நீட்டி கூற முடியாது. காரணம் அவர் யாரிடமும் எனக்கு இவ்வளவு சம்பளம் கொடுங்கள் என்று கேட்டதில்லை.

முடிந்ததை கொடுங்கள் என்பார். அவர் வீட்டு பீரோ நிறைய திரும்பி வந்த காசோலைகள் பண்டல் பண்டலாக இருந்தது என்பார்கள்.
அதேபோல தோல்வி அடைந்த படங்களின் சம்பளத்தை திருப்பிக் கொடுப்பதை தொடங்கி வைத்தவரே ஜெய்சங்கர் தான். லைட் பாயிலிருந்து ரசிகன் வரை யார் அவரை உதவி என்று தேடிப்போனாலும் இருப்பதை கொடுக்கும் கொடை வள்ளலாக வாழ்ந்தார்

. எம்.ஜி.ஆரை சந்திப்பது கடினம். அப்படி சந்தித்து விட்டால் பெரியதாக அள்ளிக் கொடுப்பார். ஜெய்சங்கரை சந்திப்பது எளிது. அவர் சக்திக்கேற்ப கிடைக்கும். அதனால்தான் ஜெய்சங்கரை சின்ன எம்.ஜி.ஆர் என்பார்கள்.

வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் நிறைந்த பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர் ஜெய்சங்கர், சோ நடத்திய ‘விவேகா பைன் ஆர்ட்ஸ்’ நாடக குழுவில் நடித்துக் கொண்டிருந்தவர் ‘இரவும் பகலும்’ படத்தில் அறிமுகமானார்.

முதல் படமே வெற்றி பெற புகழ்பெற்றார் ஜெய்சங்கர். எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற பெரிய நடிகர்கள் ஒரு பக்கம், ஜெமினி கணேசன், ரவிசந்திரன் என இளம் பெண்களை கவர்ந்து கொண்டிருந்த ஹீரோக்கள் இன்னொரு பக்கம். இதற்கு இடையில்தான் ஜெய்சங்கர் புகுந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். யார் நீ, பொம்மலாட்டம், குழந்தையும் தெய்வமும், மன்னிப்பு, பட்டணத்தில் பூதம் போன்ற படங்கள் அவரை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றன.

மற்ற நடிகர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட ஹாலிவுட் ஹீரோக்களின் சாயலில் நடிக்க ஆரம்பித்தார். சிஐடி சங்கர், வல்லவன் ஒருவன், கருந்தேள் கண்ணாயிரம், கங்கா, ஜக்கம்மா, ஜம்பு, எங்க பாட்டன் சொத்து போன்ற படங்களில் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் நடித்தார். துணிவே துணை, கங்கா போன்ற படங்களில கவுபாய் கேரக்டர்களில் நடித்தார். இவர் காலத்தில்தான் ராஜ்கோகிலா, ஜெயமாலா, ராஜ்மல்லிகா, போன்ற கவர்ச்சி நடிகைகளும் சினிமாவுக்கு வந்தார்கள்.

100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் ஜெய்சங்கர் கடைசி வரை தனக்கென தனி பாணி வைத்துக் கொண்டார். அவர் நடித்த வண்ணப் படங்கள் ஒரு சில தான். வண்ணப் படங்கள் வந்த பிறகும் நீண்ட நாள் கருப்பு வெள்ளை படங்களில் நடித்துக் கொண்டிருந்தவரும் ஜெய்சங்கர்தான். காரணம் அவர் கடைசி வரை சிறு தயாரிப்பாளர்களின் ஹீரோவாகவே இருந்தர்.

ரஜினி, கமலின் வருகைக்கு பிறகு அவரால் அவர்களுடன் போட்டிபோட முடியவில்லை. சினிமாவை விட்டு மெல்ல விலக ஆரம்பித்தார்.
சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஏவிஎம் தயாரித்த ‘முரட்டுக்காளை’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார். ஏற்கெனவே ‘காயத்ரி’ என்ற படத்தில் ஜெய்சங்கர் ஹீரோவாகவும், ரஜினி வில்லனாகவும் நடித்தது குறிப்பிடத்தக்து. முரட்டுக்காளை ஜெய் சங்கருக்கு ரீ எண்ட்ரியை கொடுத்தது. 61 வயதில் அவர் சாகும் வரையில் நடித்துக் கொண்டுதான் இருந்தார்.

இளைஞர்களுடன் இணைந்து ‘ஊமை விழிகள்’ போன்ற படங்களிலும் நடித்தார். 100 படங்களுக்கு மேல் ஹீரோ. எம்.ஜி.ஆர் போன்ற வள்ளல் குணம். அழகு குறையாத நடிகன், இத்தனை இருந்தும் ஜெய்சங்கரின் புகழ் இன்னும் குடத்திலிட்ட விளக்காத்தான் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here