இவர் இயக்கிய பெரும்பாலான படங்களில் காதலை மட்டும் மெயின் தீமாக எடுத்துக்கொள்ளாமல்..ஆனால் படத்தோடு நம்மை உணர்வுபூர்வமாக ஒன்றசெய்து தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டவர் ‘டைரக்டர்’ பாசில்.
மலையாளப்பட இயக்குனரான இவர் தமிழில் பிரவேசம் செய்தது “பூவே பூச்சுடவா” முலமாக. இவர் தமிழில் இயக்கிய படங்கள் முக்கால்வாசி இவரே ஏற்கனவே மலையாளத்தில் இயக்கியதாக தான் இருந்தது ஒருசில படங்கள் தவிர்த்து.ஆனால் இவர் தமிழில் அதை கொடுத்தப்பொழுது அதை தமிழ்படுத்துக்கிறேன் பேர்வழி என்று அதன் ஜீவனை கெடுக்காமல் அழகாக தமிழ் சமுதாயத்திற்கு எற்றமாதிரியே படத்தினை அளித்தார்.
அதற்கு காரணம் தமிழிலும் அவரே இயக்கியதால் கூட இருக்கலாம்..அநேகமாக எந்த தயரிப்பாளரும் அவரின் பணியில் குறுக்கிடாத காரணத்தினால் அவரால் சுதந்திரமாக செயல்ப்பட்டிருக்க முடியும். மலையாளத்தில் இருந்து வந்து தமிழில் மிக வெற்றிக்கரமாக இருந்த ஒரே இயக்குனர் இவராக தான் இருந்திருக்க முடியும் என்று நினைக்கிறேன்.
தமிழில் அவருக்கு பிரமாதமாக எல்லாம் படங்களிலும் கைகொடுத்தவர் ‘இசைஞானி’ இளையராஜா. பாடல்கள் ஆகட்டும், பின்னணி இசை ஆகட்டும் ராஜா தனி ராஜாங்கமே நடத்தி இருப்பார். இன்று அளவும் அந்த படங்களை நம் தொலைக்காட்சியில் பார்கும்ப்பொழுது அந்த இசை நம்மை அப்படியே உருக்கும். அதே மாதிரி பாசில்க்கு என்று தனியாக ஒரு நடிகர் பட்டாளம் தமிழில் அமைந்தது அல்லது அவர் தேர்வு செய்தார். சத்யராஜ், ஜனகராஜ், வீ.கே.ராமசாமி இப்படி தொடர்ந்து அவர் படங்களில் நடித்த நடிகர்கள் சிலர்
தமிழில் இவர் இயக்கிய படங்கள்..
பூவே பூச்சுடவா (1985 ) :
ஒரு பாட்டிக்கும் பேத்திக்கும் உள்ள பாசப்பிணைப்பை மிக மிக அருமையாக சொன்ன படம். நகைச்சுவையோடு கலந்து அந்த உணர்ச்சி போராட்டதையும் அழகாக படமாக்கி இருப்பார்.
அதுவும் நதியா, எஸ்.வீ.சேகர், சார்லி, வீ.கே.ராமசாமி மற்றும் அந்த சின்ன பசங்க காமெடியில் கலக்கி இருப்பார்கள். இறுதிக்காட்சிகளில் மனம் கனத்துப்போகும். இந்தப்படத்தின் மூலம் நதியாவை தமிழில் அறிமுகப்படுத்தியவர் பாசில்.
இதே கேரக்டரை மலையாளத்திலும் நதியா&பத்மினியே பண்ணி இருப்பார்கள். இந்த படத்திற்கு பிறகு நதியாவிற்கு தமிழில் கிடைத்த வரவேற்பு நாம் அறிவோம்.ராஜாவின் உருக்கும் இசை இந்த படத்தில் பாசில்க்கு பேருதவியாக இருந்தது.
நல்லதொரு சித்திரம்.
பூவிழி வாசலிலே (1987 ) :
தமிழில் வந்த மிகசில “திரில்லரில்” இந்த படத்திற்கு எப்பொழுதும் ஒரு தனி இடம் உண்டு. தன் தாய் கொலை செய்யப்படுவதை நேரில் பார்த்த வாய்பேச முடியாத, காது கேளாத ஒரு குழந்தை. அந்த குழந்தையை ‘எதேச்சையாக’ எடுத்து வளர்க்கும் ஒருவன், அந்த குழந்தை எங்கே சாட்சியாக மாறிவிட போகிறதோ என்று அந்த குழந்தையை அவனிடம் இருந்து ‘மீட்க’ நினைக்கும் கொலையாளிகள். இது தான் கதை.
ஆனால் அதை சொன்ன விதம்..கடைசி வரை என்ன ஆகபோகிறதோ என்று ஒரு ‘பதைபதைப்பு’ இருந்துகொண்டே இருக்கும். அதுவும் அந்த குழந்தையின் நடிப்பு எளிதில் மறக்க முடியாத ஓன்று.(சுஜி?!). இளையராஜாவின் இசை ஒரு த்ரில்லர் படத்திற்கு உண்டான அத்தனை அம்சங்களோடு வந்து இருக்கும். இதில் சிறிதாக ஒரு காதலை சொல்லி இருப்பார் பாசில்.
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு ( 1988 ) :
இந்த பதிவை எழுததூண்டிய படம். இன்றளவும் அந்த படத்தை பார்க்கும்பொழுது நம்மிடம் ஒரு பாதிப்பை ஏற்ப்படுத்திவிடுகிறது .
தன் குழந்தை இறந்தப்பிறகு ஒரு சிறுமியை ஆஸ்ரமத்தில் இருந்து தத்தெடுக்கும் ஒரு பெற்றோர். அதன்பிறகு அந்த சிறுமியை எதிர்பாராதவிதமாக பிரிந்து சென்ற தாயை அந்த பெற்றோர்கள் சந்திக்க நேரிடும்ப்பொழுது நடக்கும் உணர்சிப்போரட்டங்கள் தான் படம்.
சத்யராஜ் முதற்கொண்டு அனைவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பர். அதுவும் ரகுவரன் குறைந்த காட்சிகளே வந்தாலும் கலக்கி எடுத்திருப்பார் மனிதர்.
ஒரு நல்ல கலைஞனை சீக்கிரமாக இழந்து விட்டோம் என்றுதான் தோன்றுகிறது.